நுரையீரல் செல்களோடு ஒட்டிக்கொள்ளும் டெல்டா பிளஸ் ?
டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்திய முழுவதும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட இரண்டாம் அலையால் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிய நிலையில் தற்போது 50 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்நிலையில் டெல்டா வகை கொரோனாவிலேயே திரிபடைந்த டெல்டா ப்ளஸ் வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் அடுத்த அலை டெல்டா ப்ளஸ் தொற்றால் ஏற்படலாம் என கூறப்படும் நிலையில் இந்தியாவில் மொத்தமாக 48 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு இது குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், டெல்டா பிளஸ் வகை வைரஸ் வேகமாக பரவுவதாகவும், நுரையீரல் செல்களோடு ஒட்டிக்கொள்ளுதல், நோய் எதிர்ப்புத் சக்தியை குறைத்தல் ஆகிய தன்மைகளுடன் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை வைரஸ் சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் கண்டறியப்பட்டிருப்பதாகவும், இந்த மூன்று மாவட்டங்களில் நோய் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளை தேவையான அளவு இன்சாகோக் அமைப்பின் கீழ் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.