திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 26 ஜூன் 2021 (07:53 IST)

டெல்டா பிளஸ் திரிபு: கொரோனா மூன்றாம் அலையை தடுக்குமா இந்தியா?

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. தற்போது இரண்டாம் அலையில் இருந்து மீண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.
 
ஆனால் அடுத்த சில மாதங்களில் கொரோனாவின் மூன்றாம் அலை இந்தியாவைத் தாக்கலாம் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
 
மாநில அரசுகள் எந்த அளவுக்கு கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கின்றன என நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. சில நிபுணர்கள் அடுத்த 12 - 16 வாரங்களில் கொரோனாவின் மூன்றாம் அலை வரலாம் என எச்சரித்து இருக்கிறார்கள். மற்ற சிலரோ கொரோனாவின் புதிய திரிபான டெல்டா பிளஸ், கொரோனா தடுப்பூசியை பலவீனமாக்கும் என தங்கள் கவலையைத் தெரிவித்திருக்கிறார்கள்.
 
இந்தியாவில் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 'வேரியன்ட் ஆஃப் கன்சர்ன்' என்கிற கவலைக்குரிய டெல்டா திரிபோடு தொடர்புடையது தான் இந்த டெல்டா பிளஸ் என்கிற கொரோனா வைரஸ் திரிபு. டெல்டா திரிபு தான் இந்தியாவின் இரண்டாம் அலைக்கு காரணம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
இத்தனை அச்சப்படுவது அவசியம் தானா? அடுத்தடுத்து கொரோனா அலைகள் வரும் என்றாலும், அதன் தீவிரத்தன்மை, பரவல் விகிதம் எல்லாமே பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டது.

கொரோனா பாதுகாப்பு விதிகள்
 
மே மாத காலத்தில் இந்தியாவில் இரண்டாம் அலையின் உச்சமாக நாள் ஒன்றுக்கு நான்கு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அந்த எண்ணிக்கை இன்று சுமார் 50,000 ஆக குறைந்திருக்கிறது. தொற்று பரவல் குறைவுக்கு மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட கடுமையான ஊரடங்கு தான் காரணம் என்று கூறப்படுகிறது.
 
சந்தைகளில் மக்கள் குவிந்தது, தேர்தல் பேரணிகள் பொதுக் கூட்டங்கள், மதசார் திருவிழாக்கள் பண்டிகைகள் இந்தியாவின் இரண்டாம் அலை பரவலுக்கு காரணங்களாக கூறப்படுகின்றன. தவறான கொள்கை முடிவுகள், மோசமான கண்காணிப்பு, முன் கூட்டியே கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை புறந்தள்ளியதும் இரண்டாம் அலைக்கு காரணங்களாக கூறப்பட்டன. இந்த தவறுகள் மீண்டும் நடந்தால் கொரோனா மூன்றாம் அலை விரைவாக ஏற்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.
 
மீண்டும் இந்தியா ஓர் இக்கட்டான சூழலில் இருக்கிறது. மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது தான் பெரும்பாலும் கொரோனா மூன்றாம் அலையைத் தீர்மானிக்கும் என்கிறார் சுகாதார அமைப்பு மற்றும் பொதுமக்கள் கொள்கை நிபுணர் மருத்துவர் சந்திரகாந்த் லஹாரியா.
 
மாநிலங்கள் தங்கள் பொருளாதாரங்களை மெல்ல திறந்துவிடுவது முக்கியம் என்கிறார் அவர். "ஒருவேளை நாம் அவசரமாக சந்தைகளைத் திறந்துவிட்டு, மக்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில், அது கொரோனா பரவலை அதிகரிக்கும்"
 
கடைக் கோடி மக்கள் வரை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் சந்தைகள் மற்றும் வியாபாரங்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிக்கவில்லை எனில் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
 
புதிய கொரோனா திரிபு அச்சத்துக்குரியதா?
 
டெல்டா திரிபு தான் இரண்டாம் அலையை பெரிதும் முன்னெடுத்தது. கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும் மக்கள் மத்தியில் தொடர்ந்து வைரஸ் பரவினால், மேலும் இது போன்ற கொரோனா வைரஸ் திரிபுகள் உருவாகும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
 
இந்தியா டெல்டா பிளஸ் எனப்படும் திரிபை 'கவலைக்குரிய திரிபு' என அறிவித்துள்ளது. ஆனால் இந்த திரிபு மூன்றாம் அலையை உருவாக்கும் என உறுதியாகக் கூற இப்போதைக்கு போதுமான தரவுகள் இல்லை. ஆனால் நிபுணர்களோ அடுத்த சில வாரங்களில் ஒட்டுமொத்த சூழலும் மாறலாம் என்கிறார்கள்.
வைரஸ் பரவும் வரை, புதிய கொரோனா வைரஸ் திரிபுகள் வரும் ஆபத்து இருக்கத் தான் செய்யும் என்கிறார் தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் லலித் காந்த். "கொரோனா வைரஸ் எந்த திரிபைச் சேர்ந்தது என்பதைக் கண்டுபிடிப்பதில் நடவடிக்கைகளை மேம்படுத்தி, ஆபத்தான கொரோனா திரிபுகளை முன்பே கண்டுபிடித்து, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என கூறுகிறார்.
 
ஜூன் மாதம் வரை 30,000 மாதிரிகள் மட்டுமே, அது எந்த வகையன கொரோனா வைரஸ் திரிபு என சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதுவரையான கொரோனா வைரஸ் திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யும், ஆனால் புதிதாக உருவாகும் கொரோன திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யும் என உறுதியாகக் கூற முடியாது என்கிறார் இதுவரை பல்லாயிரக் கணக்கான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ஏ ஃபதாஹுதீன்.
 
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் உடல் நிலை கோளாறு ஏற்படுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்ட பிறகு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது.
 
கொரோனாவின் அடுத்த அலை என்பதை தடுக்க முடியாது, ஆனால் அதை தாமதப்படுத்தலாம், எந்த வகையான கொரோனா திரிபு என்பதைக் கண்டறிவது, கண்காணிப்பது மற்றும் கடுமையாக கொரோனா பாதுகாப்பு விதிகளை அமல்படுத்துவது மூலம் கட்டுப்படுத்தலாம் என்கிறார்.
 
"இவையனைத்தையும் நாம் செய்யவில்லை எனில், நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக கொரோனா மூன்றாம் அலை நம்மைத் தாக்கும்" என எச்சரிக்கிறார் ஃபதாஹுதீன்.
 
போதுமான அளவுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோமா?
 
இந்தியாவில் இதற்கு முன்பு கொரோனா பரவியவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு சக்தியைப் பொருத்து, கொரோனா மூன்றாம் அலையின் பரவல் மற்றும் தீவிரத்தன்மை இருக்கும்.
 
கடந்த ஜூன் 9 முதல் 22ஆம் தேதி வரையான நாட்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 32.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் நாள் ஒன்றுக்கு 85 முதல் 90 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தினால் தான் இந்தியாவில் தடுப்புசி செலுத்த தகுதியானவர்களுக்கு 2021ஆம் ஆண்டுக்குள் செலுத்தி முடிக்க முடியும்.
 
இதுவரை நான்கு சதவீத மக்களுக்கு மட்டுமே முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. 18 சதவீத மக்களுக்கு மட்டுமே ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
 
இந்தியாவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் அதிகரிக்கவில்லை எனில், லட்சக் கணக்கான மக்கள் இப்போதும் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்கிறார் மருத்துவர் லஹாரியா.
 
இந்தியாவில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, எத்தனை பேருக்கு இயற்கையாகவே கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடிக்கள் உருவாகியுள்ளது என்பதை மதிப்பிடுவது கடினம். பல நகரங்கள், கிராமங்களில் கொரோனா பரிசோதனை செய்வதே பெரிய சிக்கலாக இருந்தது. தங்களுக்கு கொரோனா பரவியதா இல்லையா என்பதே அவர்களுக்கு தெரியாது. இந்தியாவில் கொரோனா மரணங்களே குறைவாக கணக்கிடப்பட்டது. இந்தியாவில் 55 - 60 சதவீதத்தினருக்கு முந்தைய கொரோனா அலையில் எதிர்ப்புச் சக்தி உண்டாகி இருக்கலாம் என்கிறார் மருத்துவர் லஹாரியா.
 
மீண்டும் இந்தியா இரண்டாம் அலை போன்ற தீவிரத் தன்மையை எதிர்கொள்ளாது. இந்தியாவில் 60 - 70 சதவீதத்தினருக்கு முந்தைய கொரோனா அலையில் எதிர்ப்புச் சக்தி கிடைத்திருக்கலாம் என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் உயிரியல் பேராசிரியர் கெளதம் மேனன்.
 
"இந்தியாவில் கணிசமான மக்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இப்போதும் 20 - 30 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள். அவர்களில் வயதானவர்கள், எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் அடக்கம். எனவே கொரோனாவை கண்காணிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும், கொரோனா பரவல் அதிகரிப்பதை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும்" என்கிறார்.
 
இந்தியாவில் இன்னும் கணிசமாக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும் போது, மோசமான கொரோனா வைரஸ் திரிபு பரவிக் கொண்டிருக்கும் போது, கொரோனாவை மக்கள் அலட்சியப்படுத்தக் கூடாது என நிபுணர்கள் அனைவரும் ஒன்றாக ஆமோதிக்கின்றனர். "கொரோனா மூன்றாம் அலையைத் தவிர்க்க முடியாது, ஆனால் அதைத் தாமதப்படுத்துவதும், அதன் தாக்கத்தை குறைப்பதும் நம் கையில் தான் இருக்கிறது" என்கிறார் மருத்துவர் ஃபதாஹுதீன்.
 
"கொஞ்சம் சுகாதாரப் பணியாளர்களைக் குறித்து எண்ணிப் பாருங்கள். அவர்கள் கடந்த ஓராண்டு காலத்துக்கு மேலாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறார்கள். எங்களுக்கு சோர்வாக இருக்கிறது, தயவு செய்து உங்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களை கைவிடாதீர்கள். எங்களால் மூன்றாம் அலையைத் தாக்கு பிடிக்க முடியுமா எனத் தெரியவில்லை" என கூறினார் மருத்துவர் ஃபதாஹுதீன்.