வழிபாட்டுத் தலங்களை எப்போது திறக்கலாம்? – தமிழக அரசு ஆலோசனை!
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொடரப்பட்ட ஊரடங்கு வரும் மே 17 உடன் முடிவடைய உள்ளது. அதற்கு பிறகு மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அரசிடமிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் கடந்த மே 7ம் தேதி தமிழகத்தில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு பிறகு மூடப்பட்டன. இந்நிலையில் மதுபானக்கடைகளை திறக்கும் போது வழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் மே 15 அல்லது 16ம் தேதி ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மே 17க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல இடங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பி வருவதால் இதற்கு மேல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளுக்கு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை என பேசிக்கொள்ளப்படுகிறது.