சிபிஐ விசாரணை ஒத்தி வைப்பு!.. நாளை சென்னை திரும்பும் விஜய்?..
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கரூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
. அவர்களில் பலரையும் டெல்லிக்கு நேரில் வருவழைத்து விசாரணை நடத்தி சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். மேலும் விசாரணையில் ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
அதை ஏற்று தவெக தலைவர் விஜய் இன்று காலை தனிவிமானம் மூலம் சென்னையிலிருந்து டெல்லி சென்றார். அதன்பின் சிபிஐ அலுவலகம் சென்று விசாரணையில் ஆஜரானார். காலை முதல் மாலை வரை சுமார் 7 மணி நேரங்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது
. சிபிஐ அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். இன்று மாலை 6.30 மணிக்கு சிபிஐ விசாரணை முடியும் எனவும் நாளை மீண்டும் அவர் விசாரணையில் ஆஜராவார் எனவும் செய்திகள் வெளியானது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் படி விஜயின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சிபிஐ அதிகாரிகள் ஒத்தி வைத்திருக்கிறார்கள்.. தேவைப்பட்டால் மீண்டும் சம்மன் அனுப்பி விஜயிடம் விசாரணை நடத்தவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதைத்தொடர்ந்து இன்று இரவு டெல்லியில் தங்கும் விஜய் நாளை காலை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னைக்கு திரும்புவார் என தவெகவினர் சொல்கிறார்கள்.