வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 26 ஜூன் 2024 (13:51 IST)

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

Highcourt
கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக, பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வருகின்றன. 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர்கள் அணி மாநிலச் செயலாளர் இன்பதுரை மற்றும் பாமக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை தலைவருமான வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். 
 
இந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வில் இன்று  விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசின் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதால்,  வழக்கின் விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என முறையிட்டார்.
 
புலன் விசாரணையை உரிய நேரத்தில் துவங்காவிட்டால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்று பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, இந்த வழக்கு விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

 
இதையடுத்து, வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஜூலை மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.