1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 26 ஜூன் 2024 (13:27 IST)

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

Anbumani
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கருடன் விவாதிக்க தயாராக உள்ளதாகவும், எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் விவாதிக்க தயாராக இருக்கிறேன் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.
 
சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பேசியிருப்பது வன்னியர்களுக்கு எதிரான வன்மத்தையே காட்டுகிறது என்று விமர்சித்தார்.
 
பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது என்று பொய்யான தகவல்களையும் கூறி வருகிறார்கள் என்றும் அந்த மாநிலத்தில் கூடுதல் இடஒதுக்கீடு வழங்கியதைத் தான் உச்ச நீதிமன்றம் தடை செய்திருக்கிறதே தவிர சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதிக்கவில்லை என்றும் அன்புமணி விளக்கம் அளித்தார்.
 
மேலும், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும் மாறாக தரவுகள் அடிப்படையில் இட ஒதுக்கீடு தரலாம் என்று தான் தீர்ப்பளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். சாதி மாதிரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று இந்திய புள்ளிவிவர சட்டம் கூறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே, மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறாமல் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி எந்த சாதியினர் என்ன நிலையில் உள்ளனர் என்பதை அறிந்து அவர்களை கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார அடிப்படையில் மேம்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
 
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கருடன் விவாதிக்க தயாராக உள்ளேன் என்று சவால் விட்ட அவர், எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்றும் அதற்கான நாள், இடம், நேரத்தை அவர்களே சொல்லட்டும் என்றும் கூறினார்.

 
மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.