செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (10:24 IST)

பாஜக-வால் தான் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து தோற்றோம் – அமைச்சர் சி வி சண்முகம் ஓபன் டாக் !

தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழகத்தில் பாஜக-வினரும் அதிமுக-வினரும் மாறி மாறி தாக்கிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் ஒரு தொகுதியில் மட்டுமே இந்த கூட்டணி வெற்றி பெற்றது.  ஆனால் தேசிய அளவில் 303 இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளில் பாஜகவும், 7 தொகுதிகளில் பாமகவும், 4 தொகுதிகளில் தேமுதிகவும் தலா ஒரு தொகுதியில் புதிய தமிழகம், புதிய நீதி கட்சியும் படுதோல்வி அடைந்தது.  

இந்நிலையில் பாஜக ஆதரவாளர் ஆடிட்டர் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது, தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை இருந்திருந்தால் 5 இடங்களிலும் 4 முதல் 5 லட்சம் வித்தியாசத்தில் தோற்றிருக்க வேண்டும். அப்படியென்றால் இது யாருக்கு எதிரான அலை? என கேட்டுள்ளார். குருமூர்த்தியின் அந்த டிவிட் தமிழகத்தில் தோல்விக்குக் காரணம் அதிமுக தான் என்பது போல இருந்தது.

இதனையடுத்து சில நாட்களில் அதிமுக நாளிதழ் குருமூர்த்தியையும் துக்ளக் பத்திரிக்கையும் விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டது. அடுத்த சில நாட்களில் ’பாஜகவால்தான் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்தோம்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்தது மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியது.

இது குறித்து நேற்று விளக்கமளித்தார் சி வி சண்முகம். அப்போது ‘தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணம் என்னவென்று சொன்னேன்.. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் மட்டும் தோல்வியடையவில்லை. ஏன் பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர் என்பதையும் சொல்லியிருக்கிறேன். பாஜக தமிழகத்துக்கு எதிரானக் கட்சி என்ற பிம்பத்தை திமுக ஏற்படுத்தியது. அதைப் பாஜக சரியாகக் கையாளவில்லை. அதனால் தான் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து தோல்வியை நழுவ நேரிட்டது.’ என விளக்கம் அளித்துள்ளார்.