5 பைசாவுக்கு பிரியாணி: சென்னையில் அலைமோதிய கூட்டம்!
சென்னையில் உள்ள பிரபல பிரியாணி கடையில் சர்வதேச உணவு தினத்தை அனுசரிக்கும் வகையில் 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.
உலகமெங்கும் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்து ஆண்டுதோறும் அக்டோபர் 16 அன்று சர்வதேச உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் உணவு தினத்தை சாதாரண மக்களிடமும் கொண்டு செல்லும் நோக்கத்தில் சென்னையில் உள்ள பிரபல ‘தொப்பி வாப்பா பிரியாணி” கடை ஒரு புதிய சலுகையை இன்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.
பழைய 5 பைசா கொண்டு வந்து கொடுத்தால் அவருக்கு ஒரு பிரியாணி இலவசம். ஆமாம்! தற்போது மதிப்பில்லாமல் போன அதே கட்டமான 5 பைசா நாணயம்தான்! ஒரு 5 பைசா கொடுத்தால் அவருக்கு ஒரு பிரியாணி இலவசம் என அறிவித்ததுதான் தாமதம். கடை முன்னர் காலையிலிருந்தே கூட்டம் கூட தொடங்கிவிட்டது. பலர் 5 பைசாவை கொண்டு வந்து கொடுத்து பிரியாணி வாங்கி சென்றார்கள்.
இதேபோல திண்டுக்கலில் உள்ள பிரியாணி கடை ஒன்றிலும் 5 பைசாவுக்கு பிரியாணி தரும் சலுகையை அறிவித்திருக்கிறார்கள். உணவின் மதிப்பையும், பழம்பொருட்களின் பெருமையையும் அனைவரும் உணர்ந்து கொள்வதற்காக இந்த திட்டத்தை அறிவித்ததாக அந்த ஓட்டலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த 5 பைசாவுக்கு பிரியாணி கொடுத்த செய்தி சமூக வலைதளங்கள் மூலம் பல இடங்களில் வைரலாக பரவி வருகிறது.