செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 16 அக்டோபர் 2019 (16:21 IST)

ராஜீவ் காந்தி கொலைக்கும் பிரபாகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: விடுதலை புலிகள் சார்பாக அறிக்கை

ராஜீவ் காந்தி கொலைக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அந்த அமைப்பின் பெயரில் அறிக்கை வெளிவந்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது சரி என்பது போல் பேசி சர்ச்சையை கிளப்பிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தேசிய ஒருமைப்பாட்டை சீர்குழைத்தல், வன்முறையை தூண்டுதல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சீமான் பேசியதை குறித்து பல அரசியல் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் பெயரில், குருபரன் குருசாமி, லதன் சுந்தரலிங்கம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ராஜீவ் காந்தி கொலைக்கும், விடுதலை புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை, ராஜீவ் கொலையுடன் எங்களை தொடர்புபடுத்துவது, ஈழ மக்களை அழிக்க செய்யும் சதித்திட்டமாக தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், ”பலமுறை விளக்கம் அளித்தாலும், ராஜீவ் காந்தி கொலைக்கு விடுதலை புலிகள் தான் காரணம் என திணிக்கப்படுகிறது” என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஈழம் குறித்து போராடி வருபவர்கள், பிரபாகரனுக்கும் ராஜீவ் படுகொலைக்கு சம்பந்தம் இல்லை என கூறிவருகின்றனர். சீமான் சர்ச்சை பேச்சு அவர்களுள் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் பெயரில் அறிக்கை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.