ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2024 (18:08 IST)

மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பா..? ஓபிஎஸ் விளக்கம்..!!

மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற வதந்திகளை, விஷமப் பிரசாரங்களை, தவறான தகவல்களை தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும் என்றும் மக்களவைத் தேர்தலில் 'இரட்டை இலை' சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது நமது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இரட்டை சிலை' சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் என்றும் இந்த முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
 
இந்தியாவில் தொடர்ந்து நிலையான நல்லாட்சியை பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தர முடியும் என்பதன் அடிப்படையில், பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன் அடிப்படையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அதற்கான முடிவு எட்டப்பட்டவுடன் விவரங்கள் அனைத்தையும் நானே தெரிவிப்பேன் என்றும் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.