புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (10:26 IST)

பூத் ஏஜெண்ட் நிதியை சுருட்டிய பாஜக நிர்வாகிகள்! – பாஜக தொண்டர்கள் கொலை மிரட்டல், போஸ்டர் அடித்து கண்டனம்!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பூஜ் ஏஜெண்ட் நிதியை சுருட்டியதாக பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக பாஜகவினரே கிளர்ந்து எழுந்துள்ளனர்.



நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்களில் நடந்த தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டி பாஜக சில கட்சிகளுடன் சேர்ந்து தனித்து களமிறங்கியது.

தேர்தல் அன்று வாக்குச்சாவடிகளில் பூத் ஏஜெண்டாக வேலை செய்தவர்களுக்கு வழங்க அந்தந்த பகுதி பாஜக மாவட்ட நிர்வாகிகளிடம் பணம் வழங்கப்பட்டுள்ளது. அதை சில இடங்களில் நிர்வாகிகளே சுருட்டிக் கொண்டு பூத் ஏஜெண்டுகளுக்கு தண்ணிக் காட்டியதாக தெரிகிறது. இதனால் கடுப்பான பாஜக பூத் ஏஜெண்டுகள் மற்றும் பிற பாஜகவினர் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை துரைப்பாக்கத்தில் பூத் ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுக்காத பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் முத்து மாணிக்கத்திற்கு பாஜகவினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தன் கட்சியினர் மீதே அவர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Poster


அதுபோல திருமங்கலத்தில் பாஜக பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிக் கொண்டதாக பாஜகவை சேர்ந்த பாராளுமன்ற அமைப்பாளர், மதுரை மேற்கு மாவட்ட தலைவர், மாவட்ட செயளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகியோரின் புகைப்படங்களோடு போஸ்டர் ஒட்டியுள்ள பாஜகவினர் கட்சி தலைமை அவர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சொந்த கட்சியினரே கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக திரும்பியுள்ளது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K