வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 மார்ச் 2024 (09:31 IST)

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. தமிழ்நாட்டின் பெயரே இல்லை! – காரணம் இதுதானாம்!

நேற்று மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் அதில் தமிழகத்திலிருந்து எந்த பெயரும் இடம்பெறாமல் இருந்தது.



மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் முனைப்பில் பாஜக தீவிரமாக உள்ளது. இதற்காக மாநில வாரியாக கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், குஜராத் என முக்கியமான மாநிலங்களில் எந்த வேட்பாளர் எந்த தொகுதியில் நிற்கிறார் என அதில் மாநில்வாரியாக வெளியிட்ட பெயர் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. இத்தனைக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாட்டில் போட்டியிடலாம் என்றும் பேசிக் கொள்ளப்பட்டது.


ஆனால் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி இன்னும் உறுதியாகாததே முதற்கட்ட பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறாததற்கு காரணம் என கூறப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையை சீக்கிரம் முடிக்கும்படி பாஜக தலைமை, தமிழக பாஜகவை அழுத்தியுள்ள நிலையில் பாஜக பிரமுகர்கள் கூட்டணி தொடர்பாக பிற கட்சித்தலைவர்களை தேடி சென்று பேசி வருகின்றனர்.

அனைத்து பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டையும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தயாராவதற்குள் முடித்துவிட தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும், தமிழ்நாட்டில் போட்டியிடும் ஸ்டார் வேட்பாளர்கள் பட்டியல் பாஜக தலைமையின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் வெளியாகும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Edit by Prasanth.K