வியாழன், 3 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (15:36 IST)

காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்?

பாஜக முன்னாள் உறுப்பினரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.



தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்து வந்தவர் காயத்ரி ரகுராம். முன்னதாக பாஜக கட்சியில் இருந்த காயத்ரி ரகுராமுக்கும், சில பாஜக முக்கிய புள்ளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு வெளியேறினார்.

அதன்பின்னர் சமீப காலங்களில் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வரும் அவர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் காங்கிரஸ் கட்சி தொடங்கி 138 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் விதமாக பொதுமக்கள், பாஜகவின் ஆட்சி மாற்றத்தை விரும்புபவர்கள் 138, 1380, 13800 என்று தங்களால் முடிந்த நிதியை அளிக்கலாம் என தெரிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு 1380 நன்கொடை அளித்துள்ளார் காயத்ரி ரகுராம். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “எங்களுக்கு புதிய தலைமுறை வேண்டும், ஆட்சி மாற்றம் வேண்டும், நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்த ஒரு குடும்பத்தை சுயநலத்திற்காக இழிவுபடுத்தும் பா.ஜ.க நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு போலி சாமியார் வேஷம் வேண்டாம். வன்முறை, வெறுப்பு, பாலியல் துன்புறுத்தல், மோசடி, ஜனநாயகத்தை அபகரித்தல், இந்து மதத்தின் பெயரால் அரசியல் ஆகியவற்றை நாங்கள் விரும்பவில்லை. சுதந்திர போராட்ட வீரர்களான காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜக சவாரி செய்கிறது. சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் பாஜகவின் பொய்களை நாங்கள் விரும்பவில்லை. பாதுகாப்பில் தோல்வியடைந்த பாஜக. பிஜேபியை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள் நன்கொடை அளியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் காயத்ரி ரகுராம் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இணையவோ அல்லது ஆதரவாக பிரச்சாரம் செய்யவோ வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K