தமிழகத்தில் AY 4.2 உருமாறிய கொரோனா தொற்றா..?
AY 4.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் இதுவரை தமிழகத்தில் கண்டறியப்படவில்லை என அமைச்சர் தகவல்.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பலகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட இரண்டாம் அலையால் இந்தியாவில் மக்கள் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதனால் தற்போது கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் உறுதிப்படுத்தியுள்ளது. ஏ.ஒய் 4.2 எனப்படும் இந்த புதிய வகை வைரஸ் இதுவரை 17 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கர்நாடகாவில் புதிய உருமாற்றம் அடைந்த AY 4.2 கொரோனா தொற்றால் 2 பேர் பாதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் AY 4.2 என்ற உருமாறிய கொரோனா இதுவரை கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும் பண்டிகை காலமும் வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.