வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 31 டிசம்பர் 2018 (12:55 IST)

ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு? – போஸ்டரால் சர்ச்சை !

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதில் அனைத்து சமுதாய மக்களும் இடம்பெற வேண்டுமென வலியுறுத்து அவனியாபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகியப் பண்டிகைகளின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கம். ஆனால் இடையில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்துவதாக பீட்டா போன்ற அமைப்புகள் வைத்த குற்றச்சாட்டால் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. அதற்கு எதிராக மக்கள் தமிழகம்  முழுவதும் போராடி தடையை நீக்கி அரசை புதிய சட்டமியற்ற வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக அதற்குத் துளியும் சம்மந்தமில்லாத சென்னை மக்களும் ஜாதி பாகுபாடு பார்க்காமல் போராடினர். ஆனால் ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதியப் பாகுபாடுகள் இருந்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தவும் கலந்துகொள்ளவும் அதிகாரம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. அதை உறுதிப்படுத்தும் விதமாக மதுரை அவனியாபுரத்தில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்லது.

தமிழக அரசு ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அவனியாபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக் கட்டு நடத்தப்படுகிறது.இதனால் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் குறைக்கப்ப்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு அவனியாபுரத்தில் வசிக்கும் 17 ஜாதி பிரதிநிதிகள் அடங்கிய கிராமப் பொதுமக்கள் குழு ஒன்றை உருவாக்கி அக்குழு மூலம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், என மதுரை கலெக்டரிடம் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். இது சம்மந்தமாக உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.

கோட்டாட்சியர் ,இதுசம்மந்தமாக நடத்திய பேச்சுவார்த்தையில் சூமுகம் ஏற்படாததால் வர இருக்கும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அவனியாபுர அனைத்து சமுதாயப் பொதுமக்கள் சங்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் ’ அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்திட தனியொரு சங்கத்துக்கு அனுமதி வழங்கிடாதே, அவனியாபுரம் அனைத்து சமுதாய பொதுமக்கள் அடங்கிய பொதுக்கமிட்டிக்கு அனுமதி வழங்கிடு, இல்லையேல் அனைத்து சமுதாய பொது மக்களும் ஒன்றிணைந்து நடைபெற இருக்கின்ற திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை புறக்கணிப் போம்.’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் மதுரை அவனியாபுரம் பகுதிகளில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.