புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 நவம்பர் 2019 (19:30 IST)

என் வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டது: அயோத்தி தீர்ப்பு குறித்து தமிழக பிரபலம்

இந்தியாவே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியானது. இந்த தீர்ப்பால் நாட்டில் பதட்டம் ஏற்படலாம் என்ற காரணத்தால் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வெளியான தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக இருந்தாலும் இஸ்லாமியர் தரப்பில் இருந்து ஏற்றுக்கொள்வதாகவும், இந்ததீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. எனவே அயோத்தி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுவிட்டதாகவே கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பந்த் கூறியதாவது:
 
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. இந்திய நீதித்துறைக்கு கிடைத்திருக்கின்ற மாபெரும் வெற்றி. ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த தேசத்தில் அவதரித்த பகவான் ராமருக்கு வெற்றி. இன்று சனிக்கிழமை பிரதோச நாளில் இந்த தீர்ப்பு வெளிவந்துள்ளது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
 
ராமர் பிறந்த இடத்தில் ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு. இதற்காக நாங்கள் அடிபட்டு இருக்கின்றோம், உதைபட்டு இருக்கின்றோம். பல உயிர்கள் பலியாகியுள்ளது. ஒருசிலர் இறக்கும் தருவாயில் கூட என்னிடம் சொன்னது எப்படியாவது ராமர் கோவில் கட்டவேண்டும் என்பதுதான். இன்று உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி அதனை உறுதி செய்துள்ளது
 
ஒட்டுமொத்தமாக பார்த்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற எங்களுடைய கனவு நிறைவேறப் போகிறது. நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர் கிடையாது. யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. ராமர் பிறந்த இடத்தில் ஆலயம் அமைக்க வேண்டும் என்பதே எங்களுடைய ஒரே நோக்கம். அந்த நோக்கத்தை இன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கின்றோம். நாடு முழுக்க இருக்கக்கூடிய கரசேவகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எப்படி காஷ்மீர் பிரச்சனை சட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட்டதோ, அதேபோல் அயோத்தி பிரச்சனை நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.
 
இவ்வாறு அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.