ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (12:14 IST)

கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம்.! டிஐஜி உள்ளிட்ட 14 அதிகாரிகள் மீது வழக்கு..!

Vellore Jail
வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிறைத்துறை டி.ஐ.ஜி உள்ளிட்ட 14 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
 
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கலாவதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொலை குற்றத்திற்காக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் சிவகுமாரை சிறைத்துறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டு இருந்தார். 
 
காவல் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் மதிப்பில் நகை மற்றும் பணத்தை திருடியதாக தனது மகன் மீது குற்றம் சாட்டி கடுமையாக தாக்கியதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தவறு செய்த அதிகாரிகள் மீது விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 
 
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலக்ஷ்மி மற்றும்  சிறை அதிகாரிகள் என 14 பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறருக்கு காயம் ஏற்படுத்துதல், ஆபத்தான ஆயுதங்களால் தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக கட்டாய வேலை வாங்குதல், சட்ட விரோத சிறைவைப்பு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கி உள்ள சிபிசிஐடி போலீசார், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளனர்.