செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (15:14 IST)

அண்ணாமலை இன்று லண்டன் பயணம்.! வெளிநாட்டிற்கு சென்றாலும், ஆளுங்கட்சியுடன் சண்டை இருக்கும் என பேச்சு..!

Annamalai
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக இன்று லண்டன் புறப்படுகிறார். 
 
இன்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் லண்டன் செல்லும் அண்ணாமலை, லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல், தொடந்து 13 வாரங்கள், சர்வதேச அரசியல் கல்வி தொடர்பான படிப்பை பயில உள்ளார்.   
 
13 வாரங்கள் கழித்து அக்டோபர் இறுதியில் மீண்டும் தமிழ்நாடு திரும்புவார் என எதிர்பார்க்கபடுகிறது.  பாஜக மாநில தலைமை பொறுப்புகளை அண்ணாமலை லண்டனில் இருந்தபடியே கட்சியின் பொறுப்புகளை கவனித்துக் கொள்வார் எனவும், வாரத்துக்கு ஒருமுறை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கட்சி செயல்பாட்டுகளை கவனித்து வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இன்று இரவு செல்கிறேன் என்றும் நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், ஆளுங்கட்சியுடன் சண்டை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், என் இதயம் இங்கே தான் இருக்கும் என குறிப்பிட்ட அவர், வெளிநாடு சென்றாலும் அரசியல் செய்வேன் என்று கூறியுள்ளார். நான் வெளிநாடு சென்றாலும், ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்கும் என்று அவர் கூறியுள்ளார். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிராமங்களை நோக்கி பயணம் செல்ல இருக்கிறோம் என்றும் தேசிய அளவில் பிரதமர் மோடியும், தமிழகத்தில் எச்.ராஜாவும் முதல் உறுப்பினராக பாஜகவில் இணைவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மேற்கொண்ட வெளிநாடு பயணங்கள் தோல்வியில் தான் முடிந்தன என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.