இபிஎஸ் குறித்து அவதூறு.! அண்ணாமலை மீது காவல் நிலையத்தில் அதிமுக புகார்.!
எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மருத்துவ அணியின் மாநில செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் மேற்கண்ட புகார் மனுவை அளித்தார். அந்த புகார் மனுவில், ஆகஸ்ட் 25-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை களங்கப்படுத்தும் நோக்கில் பேசியதாக கூறப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர் குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே,அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிசாமி மீதும் அவதூறு பரப்பி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.