1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (15:26 IST)

பெண் அதிகாரிகளுக்கு எதிரான திமுகவினரின் தொடர் அராஜகம்: அண்ணாமலை கண்டனம்..!

Annamalai
பெண் அதிகாரிகளுக்கு எதிரான திமுகவினரின் தொடர் அராஜகம் செய்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 19 நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று, திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி என்ற நபர், பெண் கிராம நிர்வாக அலுவலர், சகோதரி திருமதி சாந்தி அவர்களை, கன்னத்தில் அறைந்தும், வயிற்றில் எட்டி உதைத்தும் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது மிருகத்தனமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாட்டாளி மக்கள் கட்சி சகோதரர்கள், தேர்தல் பிரச்சார விதிகளை மீறியதாக பொய்ப் புகார் அளிக்க மறுத்ததால், அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நாளன்று, இந்தக் கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறார் திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி.

ஆட்சிக்கு வரும் முன்னர், தெருத் தெருவாக சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, தனது கட்சியினரைச் சிறிய அளவில் கூட கண்டிக்காதது தான், அரசு அதிகாரிகளுக்கு, குறிப்பாக, பெண் அதிகாரிகளுக்கு எதிரான திமுகவினரின் தொடர் அராஜகத்திற்கு காரணம்.

பெண் கிராம அலுவலரை எட்டி உதைத்து தாக்கிய திமுக நிர்வாகி ராஜீவ் காந்தியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Edited by Mahendran