1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2024 (13:58 IST)

பாமக டி சர்ட் போட்ட இளைஞர்கள்.. அம்பேத்கர் சிலை பெட்ரோல் குண்டு குறித்து வன்னி அரசு அதிர்ச்சி தகவல்..!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை பெட்ரோல் குண்டு குறித்து வன்னி அரசு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
 
கடலூர் மாவட்டம்  குள்ளஞ்சாவடி அடுத்துள்ள அம்பலவாணன் பேட்டையில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை மீது நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சில சமூகவிரோதிகள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். குறி தவறியதால் சிலைக்கு அருகே விழுந்துள்ளது.
 
அம்பலவாணன் பேட்டை பொது மக்களும் விடுதலைச்சிறுத்தைகளும் பதறி அடித்துக்கொண்டு பார்த்தபோது, பாமக டி சர்ட் போட்ட இளைஞர்கள்  டூ வீலரில் கத்திக்கொண்டு போயுள்ளனர்.
காவல்துறையில் முறையாக புகார் கொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த போலீசார் 4 பாமகவினரை கைது செய்துள்ளது.
 
தமிழ்நாடு காவல்துறை  சரியான கோணத்தில் விசாரித்து சமூகவிரோதிகளை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும். மாற்றம் முன்னேற்றம் என அரசியல் செய்யப்போவதாக பீற்றிக்கொள்ளும் திரு  அன்புமணி ராமதாஸ் அவர்களே, இது தான் உங்களது மாற்றம் முன்னேற்றமா?
 
அதேபோல் இந்த விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம், அம்பலவாணன்பேட்டை கிராமத்திலுள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவச் சிலை மீது பெட்ரோல் குண்டுவீசி  சிலையைச் சேதப்படுத்தி அவமதிப்பதன் மூலம் வன்முறையைத் தூண்ட ஒரு கும்பல் முயற்சித்திருப்பது தெரிய வருகிறது. 
 
இத்தகைய சமூகவிரோதப் போக்கை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், அவர்களின் பின்னிருந்து யாரேனும்  இயக்குவோர் உள்ளனரா என்பதையும் புலனாய்வு செய்து கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளைச் சிறைப்படுத்திட வேண்டுகிறோம். 
 
Edited by Mahendran