ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (14:05 IST)

காலநிலை செயல்திட்டத்தை ஆங்கிலத்தில் அறிவிப்பதா? சென்னை மாநகராட்சிக்கு அன்புமணி கண்டனம்!

Anbumani
காலநிலை செயல்திட்டத்தை ஆங்கிலத்தில் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழில் வெளியிட்டு மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சென்னை காலநிலை செயல் திட்ட வரைவு அறிக்கையை (Chennai Climate Action Plan - CCAP) எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த செப்டம்பர் 12ஆம் நாள் ஆங்கிலத்தில் வெளியிட்ட சென்னை மாநகராட்சி, நாளை மறுநாள் செப்டம்பர் 26-ஆம் தேதிக்குள் அதன் மீது பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கையை தமிழில் வெளியிடாமல், மிகக்குறைந்த கால அவகாசத்தில் கருத்துகளைக் கோருவது நியாயமற்றதாகும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீயவிளைவுகளை கட்டுப்படுத்துவதற்காக மாநில அளவிலும், சென்னை மாநகராட்சி அளவிலும் காலநிலை செயல்திட்டத்தை தயாரித்து செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வந்தது. அதன்பயனாக சென்னை மாநகராட்சி காலநிலை செயல்திட்டத்தின் வரைவு அறிக்கையை கடந்த 12-ஆம் தேதி வெளியிட்டது. சென்னையிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் முழுமையாக அறிந்து கொண்டு கருத்து தெரிவிப்பதற்கு வசதியாக வரைவு அறிக்கை ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிய சென்னை மாநகராட்சி, வரைவு அறிக்கை குறித்த தகவல்கள் மக்களிடம் சென்றடைவதற்கு முன்பாகவே கருத்து தெரிவிப்பதற்கான கெடுவை நாளை மறுநாளுடன் நிறைவு செய்கிறது.
 
அதுமட்டுமின்றி, காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கை ஏராளமான குறைகளுடன் உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள 6 தலைப்புகளில் உள்ள 66 இலக்குகள் குறித்த எந்த விளக்கமும் இல்லை. அனைத்து இலக்குகளும் ஒரு வரியில் உள்ளன. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், சமாளிப்பதற்குமான திட்டங்களில் காற்று மாசுபாட்டைத் தடுப்பதும் ஒரு முதன்மை அங்கமாக இடம்பெற வேண்டும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு ஆகும். ஆனால், சென்னை மாநகரின் காலநிலை செயல்திட்ட அறிக்கையில் காற்று மாசுபாட்டை தடுக்கும் இலக்கு சேர்க்கப்படவில்லை. மரங்களையும் நகர்ப்புற பசுமைப் பகுதிகளையும் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். அதற்கான உயிரிப்பன்மய (Biodiversity) பாதுகாப்பு இலக்கினை மாநகர காலநிலை செயல்திட்டங்கள் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சென்னை திட்டத்தில் அத்தகைய இலக்கு இடம்பெறவில்லை. எனவே, சென்னை காலநிலை மாற்ற செயல் திட்டத்தை உருவாக்கும் நடைமுறையில் தலைகீழ் மாற்றம் செய்ய வேண்டும்.
 
1. சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். 
 
2. சென்னை காலநிலை செயல் திட்ட வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு, தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து இரு மாதம் காலக்கெடு வழங்க வேண்டும். 
 
3. ஐநா வாழ்விட அமைப்பின் வழிகாட்டி கொள்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் (UN-Habitat - Guiding Principles for City Climate Action Planning). 
 
4. சென்னை மாநகரம் முழுவதும், அனைத்து வடிவங்களிலும் விளம்பரம் செய்ய வேண்டும். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விளம்பரம் செய்ததைப் போன்று இதற்கும் விளம்பரம் செய்ய வேண்டும். 
 
5. செயல் திட்ட உருவாக்கத்தில் இணைந்து உருவாக்கும் (Co-creation) அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். அனைத்து தரப்பினரின் பங்கேற்பை உறுதி செய்வதற்கான 1992 ரியோ பிரகடனத்தின் 10ஆவது கோட்பாட்டை பின்பற்ற வேண்டும். 
 
6. சென்னையில் உள்ள பல்வேறு தரப்பினரிடமும், சென்னை காலநிலை மாற்ற செயல் திட்டத்தில் அவரவர் தொடர்புடைய பகுதிகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்து, அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்.
 
7. சென்னை மாநகரின் 200 வார்டுகளிலும் நேரடியான விளக்கக் கூட்டங்களை நடத்தி, மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். சென்னை நகரில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், விளக்கக் கூட்டங்களை நடத்தி, கருத்துகளை கேட்க வேண்டும். 
 
8. சென்னை நகரில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் மற்றும் அதிகம் பாதிக்கப்படக் கூடிய மக்களுடன் சிறப்பு கலந்தாய்வுகளை நடத்த வேண்டும். குடிசைப்பகுதி மக்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மீனவர்கள் உள்ளிட்ட அதிகம் பாதிக்கப்படுவோருடன் விரிவாக கலந்தாலோசிக்க வேண்டும். 
 
9. சென்னை நகருடன் தொடர்புடைய அனைத்து பொது நல அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் பொருள்வாரியாக விரிவான கலந்தாய்வுகளை நடத்த வேண்டும். 
 
10. கலந்தாய்வுகள் மூலம் பெறப்படும் கருத்துக்களை, அவற்றின் அறிவியல் அடிப்படை, தேவை, நீதி, நடைமுறை சாத்தியம் உள்ளிட்ட அளவீடுகளின் கீழ் சென்னை காலநிலை செயல்திட்டத்தில் இணைப்பதற்கான வெளிப்படையான வழிமுறையை தெரிவிக்க வேண்டும். எந்தவொரு நியாயமான கருத்தும் புறக்கணிக்கப்படக்கூடாது. 
 
எந்தவொரு பிரிவும் மற்றொரு பிரிவின் நலனுக்காக வஞ்சிக்கப்படக்கூடாது. மேற்கண்ட நடைமுறைகளை விரிவாக மேற்கொள்ளும் வகையில், கருத்துக் கேட்புக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும்; மக்களின் கருத்துகளை உள்ளடக்கிய சென்னை மாநகருக்கான காலநிலை செயல்திட்டத்தை உருவாக்கி முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 
 
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.