போதைப்பொருள் புழக்கம்..! திமுகவை கண்டித்து மார்ச் 4-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்..!!
போதைப் பொருள் புழக்கத்தை கண்டித்து மார்ச் 4ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக டெல்லியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் மூன்று பேர் தேடப்பட்டு வருவதாகவும், இக்கடத்தலில் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இந்த கடத்தல் சம்பந்தமாக அவர்களைத் தேடி வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்து உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதால் அமலாக்கத்துறையினரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் திமுக அரசை கண்டித்து மார்ச் 4 ஆம் தேதி அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். போதை பொருட்கள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்திற்கு தலை குனிவு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்-ஐ போலீசார் தேடும் செய்தி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், விடியா திமுக ஆட்சியில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.