திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மணமக்களை பிரித்த கொரோனா
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக பெரும்பாலான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் பல திருமணங்கள் மிக எளிய முறையில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மட்டும் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் விருதுநகரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், திருமண சடங்குகள் முடிந்த சில நிமிடங்களில் மணமகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப் என்பவருக்கும் விருதுநகரைச் சேர்ந்த நசீமா பானு என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்வு ஏற்பட்டதை அடுத்து இருவருக்கும் நசீமா பானு வீட்டில் எளிய முறையில் திருமணம் செய்து வைக்க இருவீட்டார் முடிவு செய்தனர்
இதற்காக சென்னையில் இருந்து முகமது ஷெரீப் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருதுநகர் வந்தார். விருதுநகர் எல்லையில் மணமகன் முகமது ஷெரீப்புக்கு இரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முகமது ஷெரீபுக்கும் நசிமா பானுவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணம் முடிந்த சில நிமிடங்களில் அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், பரிசோதனையில் முகமது ஷெரீப்புக்கு பாசிட்டிவ் இருப்பதாக கூறி அவரை அழைத்துச் சென்றனர். அவர் தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
திருமணம் முடிந்த ஒரு சில நிமிடங்களில் மணமகனை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றதால் மணமகள் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது