கருப்பர் கூட்டம்னாலும், காவி குரூப்னாலும் சரி.. தடைதான்! – அதிமுக சீக்ரெட் வார்னிங்
தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளபோதும் வேல் யாத்திரை நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளதற்கு அதிமுக நாளிதழ் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த நவம்பர் 6 வேல் யாத்திரை தொடங்கிய நிலையில் தமிழக அரசு தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வேல் யாத்திரை திட்டமிட்டப்படி நடக்கும் என்றும் நவம்பர் 17 முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடங்கும் என்றும் பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். மேலும் வேல் யாத்திரைக்கு பாஜகவின் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ள உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுகவின் நமது அம்மா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் ”மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை அதிமுக அனுமதிக்காது. சாதி, மதத்தால் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட யாத்திரை, ஊர்வலங்களை தமிழகம் ஆதரிக்காது. அது கருப்பர் கூட்டமானாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்களானாலும் சரி” என குறிப்பிட்டுள்ளது.