வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 20 ஜூன் 2018 (12:31 IST)

கோடி ரூபாய் நிலத்துக்கு ரூ. 8 லட்சம் இழப்பீடு - எட்டு வழிச்சாலையில் அரசு கரிசனம்

எட்டு வழிச்சாலை அமைப்பதால் பல்வேறு குறு நில விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, மலைகள், கிணறுகள், குளங்கள், இயற்கை வளங்கள், வன விலங்குகள் என அனைத்தும் பாதிக்கப்படும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.செல்வம் கூறியுள்ளார்.

 
மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 
 
இந்த திட்டத்தினால் 1000 கிணறுகள், 100க்கும் மேற்பட்ட ஏரி, குளம் குட்டைகள் அழிக்கப்பட இருக்கிறது. மேலும், 20க்கும் மேற்பட்ட பள்ளிகள், கோவில்கள், 8 ஆயிரம் வீடுகள் இடிக்கப்பட இருக்கிறது. இந்த சாலைப் பணிக்காக 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் மற்றும் 500 ஏக்கர் வனப்பகுதியும் அழிக்கப்படவுள்ளது.
 
அதோடு, சேலம் மாவட்டத்தில் உள்ள ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன் மலை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன் மலை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலை, திருவண்ணாம்லை மாவட்டத்தில் உள்ள கவுத்திமலை, வேதிமலை என பல மலைகள் இரண்டாக உடைக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக இந்த மலைப்பகுதிகளில் வாழும் உயிரினங்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட இருக்கிறது.

 
இந்த திட்டத்தை எதிர்க்கும் அனைவரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட நடிகர் மன்சுர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு. மேலும், இந்த திட்டத்தினால் தங்களின் விவசாய நிலங்களை பறிகொடுக்கவுள்ள விவசாயிகளையும் மிரட்டி, ஒடுக்கி வருகிறது தமிழக காவல்துறை.
 
இந்நிலையில், அரியனூர் பகுதி மக்களுடன் சேர்ந்து இந்த திட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் வீரபாண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவான எஸ்.கே.செல்வம்  சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
இந்த திட்டத்தினால் பாதிக்கப்படவுள்ள அனைவரும் சிறு,குறு விவசாயிகள். அவர்களின் வாழ்வாதாரமே அந்த நிலங்களை நம்பியுள்ளது. இது அரசுக்கு புரியவில்லை. இந்த பகுதியில் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போகும் நிலத்திற்கு அரசு வெறும் 8 லட்சத்தை இழப்பீடாக கொடுப்போம் என்கிறது. அந்த பணத்தில் சேலம் மாவட்டத்தில் எந்த இடத்திலும் நிலம் வாங்க முடியாது என அவர் புகார் கூறியுள்ளார்.