1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 மே 2024 (14:08 IST)

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

TNSTC
சமீபத்தில் கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது திருவண்ணாமலைக்கு கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னையின் மத்திய பகுதியில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் சென்னை நகரத்திற்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பேருந்து முனையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. அதுமுதல் பல மாவட்டங்களுக்கும் அங்கிருந்தே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. என்றாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் ஏராளமான மக்கள் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களாக இருப்பதால் ஒவ்வொரு முறையும் கிளாம்பாக்கம் சென்று பேருந்து ஏறுவதால் நேர விரயம் ஏற்படுவதாகவும், தினசரி ஊர் சென்று வருபவர்களையும் கருத்தில் கொண்டு திருவண்ணாமலை பேருந்தை கோயம்பேட்டிலிருந்தே பழையபடி புறப்படுமாறு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


பொதுமக்கள், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செஞ்சி வழியாக தினசரி 90 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆற்காடு வழியாக 44 பேருந்துகளும், காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக 11 பேருந்துகளும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றுடன் கூடுதலாக 30 பேருந்துகள் சேர்க்கப்பட்டு திருவண்ணாமலைக்கு 85 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மே 23ம் தேதி முதல் இந்த புதிய பேருந்துகள் செயல்பட தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K