வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 4 மே 2018 (20:39 IST)

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவி - களத்தில் இறங்கிய நடிகர்கள்

தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்கள் சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ சில நடிகர், நடிகைகள் முன் வந்துள்ளனர்.

 
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
இதற்கு அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் அவரை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
அந்நிலையில், நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்கள் செல்லும் மாணவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நுழைவு சீட்டைக் காட்டி ரூ.1000ஐ பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு 2ம் வகுப்பு ரயில் கட்டம் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதில் ஏதேனும் சிரமம் ஏற்படின், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல் / ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ உரிய உதவிகளைப் பெறலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது போக, ராஜஸ்தானில் உள்ள தமிழ் சங்கங்கள், மற்றும் சிங்கப்பூர் இணையதள குழு  உள்ளிட்ட பல அமைப்புகள் தமிழக மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளன. 
 
இந்நிலையில், ஏழை மாணவர்களுக்கு உதவ நடிகர்களும் முன்வந்துள்ளனர். கிராமபுறத்திலிருந்து நீட் தேர்வு எழுத செல்லும் 2 ஏழை மாணவர்களுக்கு உதவ தான் தயாராக இருப்பதாக நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். ஒரு மாணவருக்கு நான் உதவுகிறேன் என பிக்பாஸ் புகழ் காயத்ரி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுத செல்லும் 20 அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக நடிகர் அருள்நிதி தெரிவித்துள்ளார். அதற்காக 9841777077 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
 
இது மட்டுமில்லாமல், நீட் தேர்வு எழுத சிரமப்படும் ஏழை மாணவர்களுக்கு உதவ பலரும் முன்வந்துள்ளனர். அது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளமான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வாட்ஸ்-அப் ஆகியவைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது.