1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: சனி, 16 மார்ச் 2019 (18:08 IST)

கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை?

கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தமக்கு ஆட்சேபனை இல்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 

 
பொள்ளாச்சியில் பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
 
அதில் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் புகார் அளித்த கல்லூரி மாணவி விவரங்களை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்.
 
அவர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
 
அப்போது  நீதிபதிகள்  வெளியிட்ட உத்தரவில், பெயர் அடையாளங்களை வெளியிட்ட அதிகாரிகளின் இந்த செயலால் சம்பந்தப்பட்ட பெண்ணின் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும்.
 
எனவே அவரை வெளிமாவட்டத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்று மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.
 
அது மட்டுமல்லாமல் அவருக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சத்தை வழங்க வேண்டும். அவருடைய பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாக காரணமாக இருந்த போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
 
இந்நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க எடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். எஸ்.பி. விவகாரத்தில் தன்னிடம் அனுமதி பெற தேவையில்லை என்றும் நடவடிக்கை குறித்து அறிக்கை அளித்தால் போதும் எனவும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.