பொள்ளாச்சி சம்பவம் ; விசாரணையைக் கண்காணிக்க வேண்டும் – நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு !
பொள்ளாச்சி நடந்த பாலியல் வல்லுறவு சம்பவங்களை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர் பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
அதிமுக பிரமுகர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சம்மந்தப்பட்டவர்களை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான குரல்கள் வலுவாக எழ ஆரம்பித்தன. ஆனால் அதிமுக அரசு இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையை நேற்று சிபிசிஐடி போலீஸார் தொடங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் சிலர், தலைமை நீதிபதி தஹில் ரமானி, நீதிபதி துரைசாமி அமர்வின் முன்பு, சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொள்ளாச்சி வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும், உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், என முறையிட்டனர். ஆனால் நீதிபதிகள் இந்த கோரிக்கையை நிராகரித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்குகளில் சிபிஐ நடத்தும் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 16) பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.