புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : சனி, 16 மார்ச் 2019 (10:47 IST)

கோவை எஸ் பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை அரசாணையில் வெளியிட்ட கோவை மாவட்ட (ஊரகம்) கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
மேலும் அந்த மனுவில் பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ராஜராஜன், வில்லியம் வினோத்குமார் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் ஹரிஷ் குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தால்  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் அடையாளத்தை தமிழக அரசு வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் , அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான நேர்மையான பாரபட்சமில்லாத விசாரணை நடத்தவும் அதன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சிபிஐக்கு உத்தரவிட வேண்டும். மேலும் பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட கோவை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.