வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (13:18 IST)

இரு குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்த அபிராமி கைது...

தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்ற அபிராமி போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

 
குன்றத்தூரில் விஜய் என்பவரின் மனைவியான அபிராமி, டீயில் விஷம் கலந்து தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தப்பி சென்ற விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர விஜயையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தார் அபிராமி. ஆனால், மாதக்கடைசி காரணமாக நேற்று இரவு வங்கியிலேயே தங்கிய விஜய் நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரின் இரு பிள்ளைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டில் இறந்து கிடந்தது கண்டு அவர் அலறி துடித்துள்ளார். மேலும், அபிராமியையும் வீட்டில் காணவில்லை.  
 
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் அவர் தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
வீட்டிலிருந்த மொபட்டை எடுத்து அபிராமி சென்றுள்ளார். அவரது செல்போன் சிக்னல் கடைசியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை காட்டியுள்ளது. எனவே, வெளியூருக்கு அபிராமி தப்பி சென்றிருக்கலாம் என கருதிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 
 
நேற்று காலை விஜய் மற்றும் அபிராமியின் உறவினர்களின் செல்போனுக்கு அபிராமியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் ‘என் குழந்தைகளே போன பின்பு இனி நான் இருந்தால் என்ன? செத்தால் என்ன?’ குறிப்பிட்டிருந்தார். அதை பார்த்த விஜய், ‘ஏன் இப்படி செய்தாய்?’ என அபிராமிக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். ஆனால், அபிராமியிடமிருந்து பதில் இல்லை. அதன் பின் விஜய் அபிராமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அதற்குள் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், அவரது செல்போன் சிக்னலை வைத்து இன்று காலை நாகர்கோவிலில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.