குழந்தையை விட்டுவிட்டு மாயமான பெண்: விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரத்தில் குழந்தையை கொடுத்து விட்டு கழிவறைக்கு சென்ற பெண் தப்பித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் பேருந்து நிலையத்துக்கு 8 மாத கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் வந்துள்ளார். அங்குள்ள கட்டண கழிவறைக்கு சென்றவர் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு அங்கிருந்த ஊழியரிடம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். நீண்ட நேரமாகியும் அந்த பெண் வரவில்லை. உள்ளே சென்று பார்த்தபோது அவர் பின்பக்கமாக ஓடிவிட்டது தெரிய வந்துள்ளது.
ஓடிய அந்த பெண் யார்? இந்த குழந்தை யாருடையது? என்பது தெரியாத நிலையில் ஊழியர்கள் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான பெண்ணை தேடி வருவதுடன், குழந்தை குறித்தும் விசாரித்து வருகின்றனர்.