அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில் அண்ணாமலையார் கோவில். இந்தக் கோவிலில் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் ஆகிய மூன்று வாயில் வழியாக பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், இன்று நண்பகல் வேளையில், தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரம் வழியாக நபர் ஒருவர் அனுமதியின்றி கத்தியுடன் நுழைந்து, அங்கிருந்த பக்தர்களை பயமுறுத்தினார்.
உடனே பக்தர்கள் அங்கிருந்து கத்திக்கொண்டு ஓடினர். பின்னர், கோவிலிலுள்ள ஊழியர்களிடம் அவர் தகராறு செய்தார்.
இதுகுறித்து, ஊழியர்கள் அங்கிருந்த போலீஸாரிடம் புகாரளித்தனர். எனவே போலீஸார், குடிபோதையில் கத்தியுடன் நுழைந்த நபரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.