கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விபத்து…சென்னையில் பரபரப்பு
சென்னை மண்ணடியில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டியது. விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்பவர்களும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சென்னை மண்ணடி பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் முட்டியளவு நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் மண்ணடி ஐயப்ப செட்டி தெருவில் உள்ள பழமையான ஓட்டு வீட்டின் சுவர் இடிந்ததில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 42 வயது ஜெரினா பானு என்ற பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் உறங்கி கொண்டிருந்த அவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இத்தகவலை அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெரினா பானுவின் உடலை கைப்பாற்றி பிரேத பரிசோதனைக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.