குட்கா வழக்கில் குற்றப்பத்திரிக்கை: தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை அதிரடி
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றத்தில் இயங்கி வந்த ஒரு குட்கா ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சட்டவிரோதமாக குட்கா, பான் மசாலா வை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதோடு, கோடிக்கணக்கில் லஞ்ச பணம் மாறியது குறித்த டைரி ஒன்றும் சிக்கியது.
இந்த டைரியில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, போலீஸ் முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் உள்பட போலீஸ் உயர்அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை, கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பெயர் இடம் பெற்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் குட்கா வழக்கில் அமலாக்கத்துறை தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, அரசு ஊழியர்கள் 7 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குட்கா ஆலை உரிமையாளர் விக்னேஷ், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் முன்னாள் அமைச்சர் உள்பட ஒருசிலரின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.