ஹெல்மெட் அணிந்து பேருந்தை ஓட்டிய டிரைவர்
அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தில் பங்கேற்காமல், பணிக்கு வந்த கோபியைச் சேர்ந்த டிரைவர் பாதுகாப்பு கருதி ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கினார்.
தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு, ஓய்வூதியத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 5வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கோபி அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் அண்ணா தொழிற்சங்க டிரைவரான எஸ்.எஸ். சிவக்குமார் ஹெல்மெட் அணிந்து பணியில் ஈடுபட்டார். மர்ம நபர்கள் ஆங்காங்கே அரசு பேருந்துகள் மீது தாக்குதலில் ஈடுபடுவதால் கோவையில் இருந்து கோபிக்கு சென்ற பேருந்தில் டிரைவர் சிவக்குமார் ஹெல்மெட் அணிந்து வந்ததை பயணிகள் வித்தியாசமாக பார்த்தனர். ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கண்டக்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே இன்று வேலைக்கு வந்திருந்த டிரைவர் எஸ்.எஸ். சிவக்குமார் இன்று ஈரோடு - சத்தியமங்கலம் செல்லும் பஸ்சில் கண்டக்டர் வேலை பார்த்தார்.