திங்கள், 22 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2024 (09:32 IST)

மின்கசிவால் தீப்பிடித்து எரிந்த குடிசை வீடு! – 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல்!

Cottage fire
திருச்செங்கோடு நகராட்சி பகுதி ராஜலிங்கம் பேட்டையில் வசித்து வருபவர் செல்வராஜ் 45 இவரது மனைவி ராணி இருவரும் ஜவுளி பீஸ் மடிக்கும் கூலி வேலை செய்து வருகின்றனர்.


 
வீட்டின் கீழ் பகுதியில் பெற்றோர்கள் வசித்து வருகிற நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் குடிசை போட்டு செல்வராஜும் அவரது மனைவியும் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை.

வீட்டில் பாட்டி வீட்டு சிலிண்டர் உட்பட மூன்று சிலிண்டர்கள் வைத்திருந்துள்ளனர். அதில் இரண்டு சிலிண்டர்கள் காலியாக இருந்த நிலையில் மூன்றாவது சிலிண்டரும் குறைவான கேஸ் மட்டுமே இருந்துள்ளது.

வீட்டிலிருந்த அனைவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் திடீரென குடிசை வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. வீட்டின் மேல் மாடியில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்.

வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடிக்கவே அக்கம் பக்கத்தினர் இது குறித்து திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 
கேஸ் சிலிண்டர் வெடித்ததில் குடிசை வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து கீழே விழுந்துள்ளது. அனைவரும் வேலைக்கு சென்று விட்டதால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததால் தீயின் வெப்பத்தால் வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்து சிதறி இருக்கிறது என  முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த புதிய கலர் டிவி வாஷிங் மெஷின் பிரிட்ஜ் ஆர்ஓ சிஸ்டம் வீட்டில் இருந்த துணிமணிகள் என அனைத்தும் எரிந்து சாம்பலானது சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.