வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (12:23 IST)

ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு..! ED-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ED
தேர்தலின் போது 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்த வழக்கில் ஏப்ரல் 24ம் தேதிக்குள் விரிவாக விளக்கமளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அந்த மனுவில், "பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பணம், தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
 
அதேபோல், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், திமுகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் அலுவலகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 
இருவரையும் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் இருவருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
 
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது என்று அமலாக்கத்துறை பதில் அளித்தது.

 
இந்த வழக்கில் ஏப்ரல் 24ம் தேதிக்குள் விரிவாக விளக்கமளிக்க வேண்டுமென்று அமலாக்கத்துறைக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.