1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2024 (14:59 IST)

"ரூபன்" திரை விமர்சனம்

ஏ.கே.ஆர் பிலிம்ஸ் சார்பில் கே. ஆறுமுகம்,இளம் கார்த்திகேயன், எம்.ராஜா ஆகியோர்கள் தயாரித்து ஜயப்பன் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் "ரூபன்"
 
இத்திரைப்படத்தில் விஜய் பிரசாத், காயத்திரி ரெமா, சார்லி,கஞ்சா கருப்பு, ராமர் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் வசிக்கும் மக்கள் தேன் எடுப்பதை வாழ்வாதாரமாக கொண்டிருக்கிறார்கள். 
 
அந்த கிராமத்தைச் சார்ந்த தம்பதியான நாயகன் விஜய் பிரசாத், நாயகி காயத்ரி ரெமாவுக்கு குழந்தை இல்லாததால் ஊர் மக்கள் அவர்களை அவமதிப்பதோடு, அவர்களை ஒதுக்கியும் வைக்கிறார்கள். இதற்கிடையே தேன் எடுப்பதற்காக நடுகாட்டுக்கு செல்லும் நாயகன் விஜய் பிரசாத், 
 
அங்கு ஒரு பச்சிளம் குழந்தையை பார்க்கிறார். நடுகாட்டில் குழந்தை எப்படி வந்தது!என்று ஆச்சரியப்படும்,அவர் அந்த குழந்தையை வளர்க்கிறார்.
 
இதற்கிடையே, யானை, புலி போன்ற விலங்குகளை வேட்டையாடி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வில்லன் கோஷ்ட்டியினரின் குற்ற செயல்கள் பற்றி அறியும் நாயகன், அவர்களை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்.
 
ஆனால், வில்லன் கோஷ்டியினர் தாங்கள் செய்யும் தவறுகளை நாயகன் மீது போட, ஊர் மக்களும் விஜய் பிரசாத் தான் இத்தகைய குற்றங்களை செய்வதாக நம்புகிறார்கள். 
 
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலைப்போடும் காலம் வர, ஊர்மக்களுடன் நாயகனும் சபரிமலைக்கு செல்ல விரும்புகிறார்.
 
ஆனால், ஊர் மக்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்க, அவரும் அவரது மகனும் மாலை போட்டு தனியாக சபரிமலை செல்ல முடிவு செய்கிறார்கள்.
 
இந்த சமயத்தில், காட்டுக்குள் சிலர் மர்மமான முறையில் இறந்துக்கிடக்கினர். அவர்களை புலி தான் கொன்றுவிட்டதாக நம்பும் வனத்துறையினர், ஊருக்குள் புலி நடமாட்டம் இருப்பதாக கூறி, கிராம மக்களின் சபரி மலை பயணத்திற்கு தடை விதிக்கிறார்கள்.
 
ஆனால், புலி இருப்பதை மறுக்கும் கிராம மக்கள், இந்த மர்ம மரணங்களுக்கு நாயகன் தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
 
கிராம மக்களின் குற்றச்சாட்டில் இருந்து நாயகன் தப்பித்தாரா?மர்ம மரணங்களின் பின்னணி என்ன? என்பதை ஆன்மீகத்தோடு சொல்வது தான் ரூபன் படத்தின் கதை. 
 
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் படியாக பொழுதுபோக்கு மற்றும் ஆன்மீகம் என  வனப் பகுதியில்  நடக்கும் கதையை சுவாரஸ்யமான திரைக்கதை ,  காட்சிகளோடும் சொல்லியிருக்கிறார்  இயக்குநர் ஐயப்பன். 
 
நாயகனாக நடித்திருக்கும் விஜய் பிரசாத்  சபரிமலைக்கு மாலைபோட்டு ஐயப்ப கடவுளை பிரார்த்திக்கும் இடங்களில் இயல்பாக நடித்து கவனம் ஈர்ப்பது மட்டும் இன்றி ஆக்‌ஷன் காட்சிகளிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.
 
நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, அழுத்தமான கதாபாத்திரத்தை மிக அழகாக நடித்திருக்கிறார். குழந்தையின்மை பிரச்சனையால் ஊர் மக்களால் அவமானப்படுத்தப்படும் காட்சிகளில் அவர் கலங்குவது, ரசிகர்களையும் கலங்க வைத்துவிடுகிறது.
 
முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சார்லியின் அனுபவமான நடிப்பு படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. கஞ்சா கருப்பு உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
 
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரனின் கேமரா பசுமையின் அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்துபடைத்திருப்பதோடு, படம் பார்ப்பவர்களுக்கும் வனத்தில் பயணிக்கும் அனுபவத்தை கொடுக்கிறார்.
 
அரவிந்த் பாபுவின் இசையில் பாடல்களும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளின் வேகத்துக்கு ஈடுகொடுப்பதோடு, கிராபிக்ஸ் காட்சிகளின் பிரமாண்டத்திற்கு உயிர் கொடுக்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது.
 
மொத்தத்தில் இந்த "ரூபன்"தமிழ் மக்களால் பாராட்டப்படுவான்