ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (10:43 IST)

நீங்க எங்க கூட சேந்துடுங்க கமல்! – வலைவீசுகிறதா பாஜக?

மக்கள் நீதி மய்யம் கட்சியோடு பாஜக கூட்டணி அமைக்க முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் பொதுமக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி தனது கட்சிக்கு மக்களிடையே ஒரு மதிப்பை கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து வியூகம் வகுக்க அரசியல் விமர்சகர் பிரஷாந்த் கிஷோரை நாடியிருந்தார் கமல். சமீபத்தில் கிஷோரின் திட்டங்களில் கமலுக்கு திருப்தி இல்லாததால் இருவருக்குமிடையேயான ஒப்பந்தம் முடித்துக் கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால் பிரஷாந்த் கிஷோர் கூட்டணி அமைக்காமல் மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று கமலுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு கமல் ஊழல் கட்சிகளோடு கூட்டணி வைப்பதில்லை என்று தீர்மானமாக சொல்லிவிட்டாராம்! இதை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் ’ஊழல் இல்லாத கட்சியோடு கூட்டணி என்றால் ரஜினி, கமல், விஜயகாந்த் மற்றும் பாஜக இணைந்துதான் கூட்டணி அமைக்க வேண்டும்’ என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார்.

இதனால் கமலையும் பாஜகவில் இணைத்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டணியில் அதிமுக பெயர் இல்லாததும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனினும் பாஜகவை பல்வேறு விதங்களில் விமர்சித்த கமல் அவர்களோடு கூட்டணி வைக்கமாட்டார் எனவும், எஸ்.வி.சேகரின் கருத்து பாஜகவின் கருத்து ஆகாது என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகின்றன.