1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (16:00 IST)

டீசல் பாக்கெட் வீச்சு… நான்கு பேர் கைது!!

ஈரோடு டீசல் பாக்கெட் வழக்கில் எஸ்.டி.பி.ஐ., நிர்வாகி உட்பட நான்கு பேர் கைது என கோவையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் பேட்டி.


கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் ஐபிஎஸ் ஈரோடு டீசல் பாக்கெட் வீச்சு சம்பந்தமாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பில் அவர் கூறும்போது... கடந்த 22ம் தேதி இரவு என். ஐ.ஏ.,நடத்திய சோதனைக்கு பின் மேற்கு மண்டலத்தில் 9 இடத்தில் வாகனம் மற்றும் கடைகளை சேதப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது. பொள்ளாச்சியில் 5 சம்பவமும், மேட்டுப்பாளையம் 2 சம்பவமும், ஈரோடு 1, புளியம்பட்டி 1 என ஒன்பது இடங்களில் எரிபொருள் வீச்சு சம்பவம் நடைபெற்றது.

ஈரோடு பாஜக இளைஞர் அணி பொறுப்பாளர் தட்சிணாமூர்த்தி என்பவர் கடையில் டீசல் பாக்கெட் வீசி எரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் எஸ்.டி.பி.ஐ நிர்வாகி சதாம் உசேன் 25 கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தில் தொடர்புடைய அவரின் நண்பர்கள் ஆசிக் 23, கலீல்ரகுமான் 28, ஜாபர் 27 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் குற்றத்திற்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளோம். ஒட்டுமொத்தமாக திட்டம் தீட்டி சம்பவம் நடைபெறுகிறதா.? அல்லது தனிப்பட்ட விதமாக நடைபெறுகிறதா என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

சிசிடிவி, சிடிஆர் அனலைஸ், மற்றும் வாகன தணிக்கை மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சம்பவம் ஒரே நபர்கள் தான்.விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

தவறு செய்தால் மாட்டுவார்கள். தற்போது சூழலை மாற்றியுள்ளோம். சம்பவம் அன்று ஒரு இரவு தான் நடந்தது. தற்போது கைது நடவடிக்கை தொடங்கிவிட்டது. கோவை மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். திருப்பூரில் ஆயிரம் போலீசார், ஈரோட்டில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.