திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (17:48 IST)

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் நீதிமன்றத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த 18 தொகுதிகளும் காலியானவை என அறிவிக்கப்பட்டது. அத்துடன் திருவாரூர் எம்.எல்.ஏவாக இருந்த கருணாநிதி மற்றும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவாக இருந்த போஸ் ஆகியோர் காலமானதை அடுத்து தமிழகத்தில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது. மேலும் அமைச்சர் பாலகிருஷ்ணன் நீதிமன்றத்தால் 3 ஆண்டு தண்டனை பெற்றதால் அவருடைய ஓசூர் தொகுதியும் காலியானது. இதனால் தற்போது தமிழகத்தில் மொத்தம் 21 தொகுதிகள் காலியானதாக உள்ளது

இந்த நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்த வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது என்கிற தகவலை அளித்தது

அதாவது தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24க்குள் முடிவு செய்யப்படவுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது. ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அத்துடன் இந்த இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.