வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (19:04 IST)

செல்போன் திருடிய 15 வயது சிறுவன் அடித்து கொலை: ஸ்டாலின், ராம்தாஸ் கண்டனம்

கரூர் மாவட்டத்தில், செல்போன் திருடியாக 15 வயது சிறுவனை ஐந்து பேர் கம்பத்தில் கட்டி சரமாரியாக தாக்கியதில் அந்த சிறுவன் பரிதாபமாக மரணம் அடைந்தார். இறந்த சிறுவனுக்கு தந்தையில்லை என்றும், தாய் மட்டுமே இருப்பதாகவும், அந்த தாயும் வெளியே சென்ற நேரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகவும் அந்த பகுதியில் இருப்பவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிறுவனை தாக்கிய ஐந்து பேர்களையும் கைது செய்துள்ளனர்.

இந்த சிறுவனின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிறுவனை கொலை செய்த ஐவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கரூரில் செல்போன் திருடியதாகக் கூறி 15 வயது சிறுவனை ஒரு கிராமமே சேர்ந்து அடித்துக் கொன்றிருக்கும் செயல் நெஞ்சை பதற வைக்கிறது! விபத்தாகவோ, வறுமையினாலோ சிறுவர்கள் வழி தவறினால், சீர்திருத்தப் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமே தவிர, அடித்துக் கொல்லும் உரிமை எவருக்கும் கிடையாது! ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து 8ஆம் வகுப்புக்கு மேல் படிக்க வசதியில்லாமல், கூலி வேலைக்குச் சென்று வந்த அச்சிறுவனின் குடும்பத்திற்கு இப்போது யார் பொறுப்பு? இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஈவு இரக்கமின்று சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனை வழங்கிட வேண்டும்! என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதேபோல் இந்த கொடூர சம்பவம் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது: கரூர் அருகே செல்பேசி திருடியதாக 8-ஆம் வகுப்பு மாணவனை அவனது வீட்டுக்குள் நுழைந்து அடித்துக் கொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. சிறுவனின் குடும்பத்துக்கு ஆறுதல். மனிதநேயம் தழைத்தோங்குவதாக கூறப்படும் தமிழகத்தில் தான் காட்டுமிராண்டித்தனம் காடாக மண்டிக்கிடக்கிறது!