செல்போன் ஒரு வரமா? சாபமா?
தகவல் தொழில்நுட்பம் பெருமளவு வளர்ந்துவிட்ட இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் எந்த மனிதரிடமாவது செல்போன் இல்லையென்றால் தான் ஆச்சர்யம். அந்த அளவுக்கு செல்போன் ’பித்து’ படித்த மனிதர், படிக்காதவர் என வேறுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டுவிக்கிறது.
அபரிமிதமாக வளர்ந்து விட்ட விஞ்ஞானத்தை பாரட்டுகின்ற அதேசமயம் அதன் பாதிப்புகளையும் நடுநிலையுடன் அலசி அதன் நிறைகுறைகளை சொல்ல வேண்டியது நமது கடமையாகிறது.
அதில் முக்கியமாக ஸ்மார்ட் போனை பயன்படுத்துபவர்கள் செல்போனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு காதில் புளூடூத் வைத்து பேசிக்கொண்டு செல்வபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது.
இந்த மாதிரி காட்சியைப் பார்க்கிற ஒரு பாமரர் ஏன் இவர்கள் தனக்கு தானே பேசிக்கொள்கிறார்கள் என்று கவலைப்படுவது இன்று நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் பலர் சாலைகளில் கத்திக்கொண்டு அடுத்தவருக்கு தொல்லை கொடுப்பதும்,அமைதிகாக்க வேண்டிய மருத்துவமனைகளில் எட்டு ஸ்பீக்கர்கள் உள்ள சைனா செல்போனில் ஊரே அதிரும்படி ரிங்டோன் வைத்து தன் இருப்புநிலையை உணர்த்துவதும், இன்றைய காலத்தில் குறிப்பாக இளைஞர்களிடையே பெருகிவருவது நல்லதற்கு அல்ல என்றே தோன்றுகிறது.
இந்த தகவல் தொடர்பு சாதனங்கள் எந்த அளவுக்கு பெருகியதோ அதே அளவு மன அழுத்தம் ,மனக்குமுறலை வெளிப்படுத்தல் , கள்ளக் காதல், பாலியல் தொடர்பான படங்கள் பார்த்தல் போன்றவை சமுதாயத்தை தவறான பதைக்கு அழைத்துச் செல்வதாகத் தோன்றுகிறது,அதிலும் குறிப்பாக நம் இளைஞர்களை.
வேலை செய்த நேரம் தவிர இதர நேரங்களில் பேசிவந்த உரையாடல்கள் இன்று கால மாற்றத்தில் நாட்களை வீணாக கழிப்பது எப்படி என்பதற்கு விளக்கம் சொல்வதாக வந்திருக்கின்றது இந்த சமூக வலைதளங்கள். இதன் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வும் ,உலக தொடர்பும் ஏற்பட்டாலும் கூட பலர் இதற்கு அடிமையாகி இதிலேயே வெறுமையாக
மூழ்கிப்போய் தம் வாழ்க்கையும் தொலைக்கின்றனர்.
இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் ,தொழில்நுட்பத்தை நம் அறிவுக்குப் பயன்படுத்தி மனித வளத்துக்கு ஆதாயம் தேடும் வகையில் அமைத்துக்கொண்டால்,அறிவியலால் உருவான விஞ்ஞானம் இவ்வுலகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும்.
இல்லையென்றால் மனிதன் கண்டறிந்த கண்டுபிடுப்புகளே அவனுக்கு வில்லங்கமாகி விபரீதங்களை நிகழ்த்த தொடங்கிவிடும்.