வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (15:19 IST)

சிறுவன் தலையில் ஸ்டேப்லரால் 14 தையல்.! போலி மருத்துவர் கைது..!!

Arrest
தென்காசி அருகே சிறுவனின் தலையில் ஸ்டாப்ளர் பின்னால் தையல் போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுவனுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக் கோயில் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்பவரது மகனான கௌஷிக் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7 ஆம் தேதி பள்ளிக்குச் சென்றபோது சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சிறுவனுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 
 
இதை அடுத்து அப்பகுதியில் இயங்கி வரும் சூர்யா மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு இருந்த மருத்துவர் அமிர்த லால் என்பவர் சிறுவனின் தலையில் தையல் போடுவதற்கு பதிலாக ஸ்டாப்ளர் மூலம் 14 இடங்களில் பின் அடித்ததாக கூறப்படுகிறது. 
 
இதையடுத்து அவருக்கு கட்டுப்போட்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் சிறுவனுக்கு தலையில் வலி அதிகமானதோடு தலையிலும் சீழ் வைத்துள்ளது. இதை அடுத்து சிறுவனை தென்காசி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்ற போது, மருத்துவர்கள் சிறுவனின் தலையில் இருந்த கட்டை அவிழ்த்தனர்.  அடிபட்ட இடத்தை சுத்தம் செய்யாமல் மண் துகள்களும் ஸ்டாப்ளர் பின் அடித்ததால் புண்ணும் உண்டாகி இருந்தது தெரியவந்தது.
 
பின்னர்  ஸ்டாப்ளர் பின்களை அகற்றிய மருத்துவர்கள் , தையல் போட்டு சிறுவனுக்கு கட்டு போட்டு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தென்காசி சுகாதாரத் துறை நடத்திய விசாரணையில் அமிர்த லால், போலி மருத்துவர் என்பதும் முறையான மருத்துவ படிப்பின்றி 12 ஆண்டுகளாக ஆங்கில முறை சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.

போலி மருத்துவரான அமிர்த லாலை, அச்சன்புதூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அமிர்ததாலின் சூர்யா மருத்துவமனைக்கு லைசன்ஸ் வாங்குவதற்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் பாபு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. எனவே பாபு மீதும் குற்றம் இருக்கும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.


இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்துள்ளனர்.