வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (14:02 IST)

சீமான் மனநிலையை சோதிக்க வேண்டும்.! அரசியலுக்கு தகுதியற்றவர்..! அமைச்சர் கீதா ஜீவன்

Geetha Jevan
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,   தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரண கர்த்தா கலைஞரை பற்றி சீமான் விமர்சனம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். சீமானின் மனநிலையை சோதிப்பது நல்லது என்றும் சீமான்  கட்சியை வழிநடத்த தெரியாதவராக இருக்கிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்
 
எங்களது  கட்சியினர் தளபதியின் கண் அசைவுக்காக தான் பொறுமையாக காத்திருக்கின்றனர் என்று குறிப்பிட்ட அமைச்சர் கீதா ஜீவன், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்க வேண்டும், ஜாதி ரீதியாக மத ரீதியாக பிரச்சனையை உண்டாக்க வேண்டும் என்பதுதான் சீமானின் பேச்சில் இருக்கிறது என்றும் கூறினார்.

சீமான் கிறிஸ்தவரையும், இஸ்லாமியர்களையும் சாத்தான் உடைய பிள்ளைகள் என்ற  பழி சொல் பேசினார் என்றும் இதேபோன்று ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் எல்லாம் தெலுங்கில் இருந்து வந்தவர்கள் என்று பேசினார் என்றும் அவர் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே பேசி வரும் சீமானை திமுக வன்மையாக கண்டிக்கிறது என்றும் பெண் காவலரின் புகாரில் தான் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார் என்றும் அந்தந்த நேரத்தில் வாய்க்கு வந்ததை சீமான் பேசுகிறார் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் குறிப்பிட்டார்.
 
பொறுப்பான முதல்வராக இருப்பதால்தான் எங்களது முதல்வர் கட்சித் தொண்டர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளதாகவும் நடைமுறைக்கு முடியாதவைகளை அடுக்கு மொழியில் பேசி வருகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கைத் தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி உலகளவில் பல்வேறு நிதியை நன்கொடையாக கட்சிக்கு பெற்று வருகிறார் என்று சீமான் மீது அவர் புகார் கூறினார்.

 
மேலும் சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும் என்றும் அரசியல் அறவேக்காடு தனமாக பேசக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் சமூகத்தை தவறான தகவல் மூலமாக வழிநடத்துகிறார் என்றும் பச்சோந்தி போன்று பேசி வருகிறார் என்றும் சீமான் அரசியலுக்கு தகுதியற்றவர் என்றும்  அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக சாடினார்.