தேர்வுக்கு முன்னரே காலாண்டு தேர்வு வினாத்தாள் லீக்: அதிர்ச்சியில் மாணவர்கள்
தமிழக பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு வினாத்தாள், தேர்வுக்கு முன்னரே இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்ற பாடத்திற்கான தேர்வு வினாத்தாள் நேற்று காலையிலேயே ஷேர் சாட் என்ற செயலியில் லீக் ஆகி விட்டதாக மாணவர்களிடையே ஒரு செய்தி மிக வேகமாக பரவியது. இண்டர்நெட்டில் லீக் ஆன இந்த வினாத்தாளும், பிற்பகலில் நடந்த தேர்வின் வினாத்தாளும் ஒரே மாதிரியாக இருந்ததால் வினாத்தாள் இண்டர்நெட்டில் லீக் ஆனது உறுதி செய்யப்பட்டுள்ளது
இதேபோல் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற 11ஆம்வகுப்பு வணிகவியல் தேர்வு வினாத்தாளும் அதற்கு முந்திய நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமையே லீக் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்வுக்கு முன்னரே வினாத்தாள்கள் எப்படி இணையதளத்தில் வெளியனது? இந்த வினாத்தாள்களை இணையதளங்களை வெளியிட்டவர்கள் யார்? என்பது குறித்து பள்ளி கல்வித்துறை உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
மேலும் வினாத்தாள்கள் போதிய அளவு அனுப்பப்படாததால் அவற்றை நகல் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், நகலெடுத்த இடத்திலிருந்து ஒருவேளை லீக் ஆகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது