அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்.. 2 வருட வாரண்டி கட்டாயம்.. நட்டு, போல்ட் கழன்றால் கூட மாற்றி தரவேண்டும்..
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள நவீன மிதிவண்டிகளுக்கான விரிவான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய தர நிர்ணயங்களின்படி மிதிவண்டிகள் தயாரிக்கப்பட வேண்டும்; 'லைலாக் மிஸ்ட்' நிறத்தில் வடிவமைக்கப்படும் இவற்றின் சட்டம், முன்புற கவை மற்றும் சங்கிலி மூடியில் அதே நிறத்தில் ஒட்டு வில்லைகள் பொருத்தப்பட வேண்டும்.
உறுதியான எஃகு குழாய்கள், MIG அல்லது TIG பற்றவைப்பு, தாக்குதல் சோதனை மற்றும் இருக்கை, மணி, கேபிள் பூட்டு, நிறுத்து கால், சுமை தாங்கி, சங்கிலி மூடி, கூடை, ஆடை பாதுகாப்பு வலை, டயர் மற்றும் விளிம்பு ஆகியவற்றுக்குக் கடுமையான அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மேலும், மாணவிகளுடன் வழங்கப்படும் 750 மில்லி லிட்டர் குடிநீர் பாட்டில் உணவு தர பாலிபுரோப்பிலீன் அல்லது டிரைட்டான் பொருளில், BPA இல்லாததாகவும் நச்சுத்தன்மையற்றதாகவும் இருக்க வேண்டும்; அதற்கான பாட்டில் பிடிப்பானும் உறுதியாக பொருத்தப்பட வேண்டும்.
மிதிவண்டி வழங்கப்பட்ட நாளிலிருந்து குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து பாகங்களுக்கும் உத்தரவாதம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என வழிகாட்டுதலில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

