தொடர்புடைய செய்திகள்
- மகாராஷ்டிரா புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு
- டெல்லியில் தொடரும் குடியரசுத் தலைவர் ஆட்சி: உச்ச நீதிமன்றம் கண்டனம்
- மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் - சோனியா காந்தி
- பாரதியார் வாரணாசியில் தங்கி இருந்த வீட்டை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்: தருண் விஜய் வேண்டுகோள்
- வலதுசாரி இந்துக்குழுக்களின் அழுத்தங்களால் கலப்புத் திருமண ஜோடியை பிரித்தோம்: போலீஸ்
தருண் விஜய், பாரதீய ஜனதாவின் தமிழ் மொழி அரசியலுக்கான முகம்
பாரதீய ஜனதாவின் மாநிலங்களவை உறுப்பினரான தருண் விஜய், நீண்ட காலமாகத் தமிழுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். பாராளுமன்றத்தில் தமிழ் மொழிப் பெருமை பேசிய உறுப்பினர்.
வட மாநிலத்தைச் சார்ந்த ஒருவர், தமிழின் பெருமை பேசுகிற போது தமிழர்கள் உணர்ச்சிவயப்பட்டு நன்றி பாராட்டுவது இயல்பே. இப்போது பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய சிந்தனை முகமாக உள்ள தருண் விஜய், இந்திரா காந்தியின் காலத்தில் உள்துறை அமைச்சகத்தின் ஹிந்தி மொழிக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தவர், அன்றைய தினத்தில் மிக இளம் வயதில் அந்தப் பொறுப்பை வகித்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.
தனது இளம் வயதில் ஹிந்தி குறித்து அன்றைய மைய அரசுக்கு ஆலோசனை அளித்துக்கொண்டிருந்தவர், இன்று தமிழ் மொழியின் பெருமை பேசுவது வியப்பிலும் வியப்பு. இன்றைய மத்திய அரசுக்குத் தலைமை வகிக்கக் கூடிய பாரதிய ஜனதா கட்சியின் சிந்தனைக் களமான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜீ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் தருண் விஜய் என்பது கவனிக்கப்பட வேண்டியது.
பாரதீய ஜனதா கட்சி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட செயல் திட்டத்துடன் களம் இறங்குவது அனைவரும் அறிந்ததே! 2014 பாராளுமன்றத் தேர்தலில் வென்ற பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் பிஜேபி குறிப்பிடத்தக்க வெற்றி கண்டுள்ளது.
குறிப்பாக, ஹரியானாவில் அவர்கள் பெற்ற வெற்றி பாரதீய ஜனதாவின் மாநிலங்களுக்கான அரசியலைப் பொறுத்தவரை முக்கியமானது. மாராட்டியததில் தனிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும் தனித்துப் போட்டியிட்டு அதிக இடங்களை வென்றார்கள்.
இது போல அடுத்து வரவிருக்கின்ற ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கு ஏதுவாக, கரண் சிங் என்ற மூத்த காங்கிரஸ் தலைவரின் மகன், பிஜேபியில் இணைந்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலம் சார்ந்த சில தனிப்பட்ட பிரச்சினைகளின் வழியாக அரசியல் செய்வதைப் பாஜக தனது செயல் திட்டங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளதை அறியலாம். அந்த வகையில் தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தல், 2016இல் வரவிருக்கிறது, அதை ஒட்டி மொழி அரசியல் குறித்த செயல்பாடுகளுக்குத் தருண் விஜய் பயன்படக் கூடும்.
The Times of India போன்ற பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்த தருண் விஜய், ஆர்.எஸ்.எஸ். (RSS)இன் வாராந்தரப் பத்திரிகையான பாஞ்சசன்யாவில் 1979ஆம் ஆண்டு இணைந்தார். இந்தப் பத்திரிகையின் மூத்த ஆசிரியராக சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர், தமிழ் மொழியின் பெருமை குறித்துப் பேசுவது மொழியின் எல்லைகளைத் தாண்டி, அரசியல் எல்லைகளைத் தொடுவது போல தெரிகிறது.
தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்துத் தருண் விஜய், பாராளுமன்றத்தில் பேசியதன் காணொலி
மேலும்
பாரதீய ஜனதா கட்சியின் மொழி சார்ந்த நிலைப்பாடுகளில் சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிப்பதும் ஒன்றாகும். தற்போதைய மைய அரசின் ஹிந்தி சார்ந்த சில செயல்பாடுகளைத் தமிழகத்தின் பிரதான திராவிட அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிற பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்த போது அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த மாநிலம் தமிழகம்.
அப்போது தமிழக அரசியல் கட்சிகள் மொழிக் கொள்கை சார்ந்து சில கேள்விகளை எழுப்பிய போது, அதற்குத் தேசிய கட்சியான பாரதீய ஜனதா சார்பில் எந்தப் பெரிய தலைவரும் எதிர்வினை ஆற்றவில்லை.
தமிழகத்தில் மொழியை மையமாக வைத்து நீண்ட காலமாக அரசியல் செய்யப்படுகிறது. மொழி சார்ந்து ஆளுமையுடன் பேசுகிற அளவில் தேசிய கட்சிகளில் யாரையும் பார்க்க முடிவதில்லை. தமிழக அரசியல் களத்தில் பாரதிய ஜனதாவிற்காக மொழி சார்ந்த அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கக் கூடிய நபராகத் தருண் விஜய்யை உருவாக்குவது போல தெரிகிறது.
ஜி.யூ.போப், வீரமாமுனிவர், ஜார்ஜ் எல்.ஹார்ட், அஸ்கோ பர்ப்போலா எனப் பல அந்நிய தேசத்தவர் தமிழ் மொழியின் பெருமைகளைப் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். அந்த வரையறைகளின்படி தருண் விஜய்யை மதிப்பிடுவது சிரமம். தமிழ் மொழியின் பெருமை பேசுகிறவர்களைப் பாராட்டுவது கொண்டாடுவது என்பதைத் தாண்டி, மாறி வருகிற தேசிய மற்றும் மாநில அரசியல் கூறுகளை மனத்தில் கொண்டே தருண் விஜய்யை மதிப்பிட வேண்டி உள்ளது.
வைரமுத்துவைத் தலைவராக கொண்ட வெற்றித் தமிழர் பேரவை, தருண் விஜய்யைப் பாராட்டி விழா எடுக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. மூத்த தமிழ் அறிஞர்களான ஔவை நடராசன், க.ப.அறவாணன், ம.ராசேந்திரன் போன்றோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு ஜூ வி போன்ற அரசியல் இதழ்களின் கடைசிப் பக்கங்களில் முழுப் பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழைப் பாராட்டிப் பேசுகிறார் தருண் விஜய் என்பதைத் தாண்டி, அவர் நீண்ட காலமாகப் பணியில் இருந்த பாஞ்சசன்யம் மற்றும் இப்போது தலைமை வகிக்கிற டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் மொழிக் கொள்கை குறித்துச் சற்றே யோசிக்க வேண்டி உள்ளது. இந்த நிறுவனங்கள், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு மூளையாகச் செயல்படக் கூடியவை.
பாரதிய ஜனதா கட்சியின் மொழி சார்ந்த கொள்கைகளை எதிர்க்கிற தமிழகத்தில் தருண் விஜய்யை அழைத்து அவர் தமிழுக்குக் குரல் கொடுக்கிறார் என்பதற்காகப் பாராட்டுவது நுண் அரசியல் வரையறைகளின் படி முரணாகவே படுகிறது. தமிழ் மொழி அரசியலில் பாஜகவின் முகமாகத் தருண் விஜய், நிதானமாக வளர்த்து எடுக்கப்படுகிறார். 2016 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தருண் விஜய், தமிழகத்தில் முக்கிய பங்காற்றுவார் எனக் கருத இடம் உள்ளது.
